சென்னை:
‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்று முழங்க இந்தியாவிலேயே காங்கிரசுக்கு மட்டும்தான் முழுத் தகுதி இருக்கிறது என, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” என்ற தலைப்பிலான சிறப்பு விழிப்புணர்வு ஒலிநாடாவை கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வெளியிட, அதனை முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பேசிய எம்பி விஜய் வசந்த், “தற்கால இளைஞர்களை வெறும் அறிக்கைகள் மூலம் ஈர்க்க முடியாது. ரீல்ஸ்கள் மற்றும் பாடல்கள் மூலமாகவே அவர்களை சென்றடைய முடியும்.
எனவே, இந்த காமராஜர் பாடலை அனை வரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து, அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கச் செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், “தொழிலதிபர் அனில் அம்பானி ரூ.40,000 கோடியைத் திருப்பிச்செலுத்தாத நிலையிலும், பிரதமர் மோடி அவரை தன்னுடன் பிரான்ஸ்க்கு விமானத்தில் அழைத்துச் செல்கிறார்.
அமெரிக்காவில் அதானிக்கு ரூ.2,400 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது.
‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்று முழங்க இந்தியாவிலேயே காங்கிரசுக்கு மட்டும்தான் முழுத் தகுதி இருக்கிறது” என்றார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி.க்கள் சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்), ஆர்.சுதா (மயிலாடுதுறை) ஆகியோர் பிரதமர் மோடிக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர்.