சென்னை தியாகராய நகரிலுள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன் ,சுதாகர் ரெட்டி , மத்திய அமைச்சர் எல்.முருகன் , மாநிலத் தலைவர் அண்ணாமலை , நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன் , பொன். ராதாகிருஷ்ணன் , எச் ராஜா உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மையக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை காரணமாக வைத்து இணையதளங்களில் ஒரு தரப்பினர் மீது, மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும், கிராமங்களின் கிளை அளவில் பாஜகவை பலப்படுத்த வேண்டும், வழக்குகளில் சிக்கும் பாஜகவினருக்கு மாவட்ட அளவில் வழக்கறிஞர் அணி மூலம் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பன குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் மையக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் 3 வது முறையாக பதவியேற்றதை முன்னிட்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டோம்.
தமிழக மக்கள் 50 லட்சம் வாக்குகளை தனிப்பட்டு பாஜகவிற்கும், கூட்டணியுடன் 80 லட்சம் வாக்குகளையும் தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம். எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி தந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இன்றைய பிரச்சனைகளான நீட் தேர்வு குறித்து பேசினோம். நீட் பல ஏழை மாணவர்களின் நம்பிக்கைக்க்குரிய தேர்வாவாக உள்ளது, ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர உதவியுள்ளது.
14 லட்சத்திற்கு மேலான தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். பொதுமக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறிய பிறகும் தேர்வுக்கு எதிராக சிலர் பிரசாரத்தை மேற்கொண்டு வருவது தவறு.
நீட் தேர்வில் முறைகேடே நடந்திருந்தாலும் அது களையப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. டிஎன்பிஎஸ்சி போல பல மாநில தேர்வுகளில் குளறுபடிகள் நடந்துள்ளன.
அதற்காக அந்த தேர்வையே கைவிட்டு விட்டனரா? நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்துவதில் வேண்டுமானால் தமிழக அரசு கவனம் செலுத்தலாம், ஆனால் நீட் தேர்வே கூடாது என கூறுவது தவறு.
யாருடைய மனைவி உச்ச நீதிமன்றத்தில் போராடி நீட்டை கொண்டு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
யார் நினைத்தாலும் நீட்டை தடுக்க முடியாது, ஏனென்றால் இது உச்சநீதிமன்ற தீர்ப்பு. பாமகவிற்கு ஆதரவாக விக்கிரவாண்டி தொகுதி பிரசாரத்தில் பாஜக ஈடுபடும். கட்சி குறித்து நான் நேர்மறையாக கூறிய சில கருத்துகள் வேண்டுமென்றே மாநில தலைவருக்கு எதிராக கூறியதாக திரித்து கூறப்படுகிறது.
அனைவருக்குமே கருத்து சுதந்திரம் உள்ளது, நான் எப்போதும் பாஜகவிற்கு நன்றியுள்ளவள். கட்சியில் இருக்கும் அனைவரையும் மதிக்கிறேன். பாஜகவில் உள்ள எந்த நிர்வாகியுடனும் எனக்கு எந்த மன வேற்றுமையும் இல்லை, நான் கட்சி சார்ந்து சாதாரணமாக கூறிய கருத்தை சில நேரங்களில் திரித்து கூறிவிடுகின்றனர்” என்றார்.