லண்டன்:
இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது இதுவே முதல்முறையாகும்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஆடவர் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு 142 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இதனால் இந்த போட்டி வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை சந்திக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் இந்திய மகளிர் வெற்றி பெற்றுள்ளது.
அதோடு, இங்கிலாந்து மண்ணில் இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது இல்லை.
இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி 2 வெற்றி, 7 டிராக்களை பதிவு செய்துள்ளது. இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கக்கூடும். 3-வது இடத்தில் பிரியா பூனியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். ஹர்லின் தியோல், ஸ்ரீசரணி, நந்தினி சர்மா ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக களமிறங்கக்கூடும்.
இங்கிலாந்து மகளிர் அணி நாட் ஷிவர்-பிரண்ட் தலைமையில் களமிறங்குகிறது. அனுபவம் வாய்ந்த தொடக்க வீராங்கனையான டாமி பீமாண்ட், இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த இரண்டு இங்கிலாந்து வீராங்கனைகளில் ஒருவராக பீமாண்ட் திகழ்கிறார்.
2023-ம் ஆண்டு மகளிர் ஆஷஸ் தொடரில், டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர், 208 ரன்கள் விளாசியிருந்தார்.
இதன் மூலம், டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருந்தார்.
நேரம்: பிற்பகல் 3:30
நேரலை: ஸ்போர்ட்ஸ் 18