செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்தார். அவரது 7-வது (149-வது போட்டி) செஞ்சூரியாகும். அவர் 84 பந்தில் 102 ரன்னும் (14 பவுண்டரி), ஜெமீமா ரோட்ரிக்ஸ் 45 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி), ஸ்மிருதி மந் தனா, ஹர்லீன் தியோல் தலா 45 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 305 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் நேட் ஸ்கிவர்-பிரண்ட் 98 ரன்னும் (11 பவுண்டரி), எம்மா லேம்ப் 68 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். கிராந்தி கவுட் மிகவும் அபாரமாக பந்து வீசி 52 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றிய 4-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். தீப்தி சர்மா (2 முறை), மம்தா மாபென், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் வரிசையில் அவர் இணைந்தார். ஸ்ரீ சரணிக்கு 2 விக்கெட்டும், தீப்தி சர்மாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா ஏற்கனவே 3-2 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.