கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்!! சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!!

சென்னை:
“கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

அவர்கள் குடும்பத்துக்குத் தேவையான நிதியுதவியையும், சட்ட உதவியையும் அரசு செய்ய வேண்டும்” என சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கர்நாடகா மாநிலத்தில், ஹனூர் அருகே அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்கள் அந்த மாநில வனத்துறையினரால் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அதை, ஏற்கெனவே, இந்த அவையின் கவனத்துக்கு எடுத்து வந்துள்ளோம்.

சுட்டுக்கொல்லப்பட்ட அந்த மூன்று தமிழர்களின் உடற்கூறு ஆய்வறிக்கை இன்று வெளிவந்துள்ளது.

அதில் மூன்று பேருமே சித்திரவதை செய்யப்பட்டு, மிக அருகில் நிற்க வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று அந்த உடற்கூறு ஆய்வறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

மூன்று பேருக்கும் உடல் முழுக்க படுகாயம் இருந்திருக்கிறது. விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தெளிவாகச் சொல்கிறது.

எனவே, இது முழுக்க முழுக்க ஒரு படுகொலை. இந்தப் படுகொலைக்கு எதிராக இந்த ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

குறைப்பட்சம் அந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறதா? கடந்த வாரம், கர்நாடகா முதல்வர் தென் மாநில முதல்வர் மாநாட்டுக்காக இங்கு வந்தார். அப்போது நேரிலாவது தமிழக அரசு, தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறதா?

கர்நாடக மாநில காவல்துறைக்குப் பதிலாக, ஒரு மேல்மட்ட நீதி விசாரணை செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று, இந்த அவையில் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். அது சம்பந்தமாக இந்த மாநில முதல்வரால் ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா?

இந்தப் பிரச்சினை நடந்தவுடன் முதல்வரோ, அமைச்சரவையில் இருப்பவர்களோ, கர்நாடகா சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

அவர்கள் குடும்பத்துக்குத் தேவையான நிதியுதவியையும், சட்ட உதவியையும் அரசு செய்ய வேண்டும் என்று உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *