கோவை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை ஒருநாளைக்கு முன்பு கடந்ததால் உயிர் தப்பினோம் என, நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள் தெரிவித்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 39 பேர் ஆன்மிக பயணமாக கைலாய யாத்திரைக்கு நேபாளம் சென்றிருந்தனர். இவர்கள் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இதில் 28 பேர் நேற்று விமானத்தில் கோவை திரும்பினர். அவர்களை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன், யாத்திரை சென்றவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
கிருஷ்ணகுமார் என்பவர் கூறும்போது, ‘‘ஆகஸ்ட் 18-ம் தேதி திருக்கைலாய யாத்திரைக்கு 38 பேரை அழைத்துச் சென்றேன். இன்று நல்லபடியாக அனைவரும் திரும்பியுள்ளோம்.
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, நாங்கள் குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்று விட்டோம்.
அதன் பின்னர், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டதால் உடனடியாக என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தொடர்ந்து எங்களிடம் விசாரித்து நிலவரங்களை கேட்டு முழுமையாக ஒத்துழைத்தனர்.
மானசரோவர் பகுதியில் இருக்கும் போதுதான் எங்களுக்கு வெள்ள பாதிப்பு தகவல் தெரியவந்தது.
39 பேர் சென்றதில் 5 பேர் மட்டும் இன்று மாலை சென்னைக்கு வருகின்றனர். மற்ற அனைவரும் திரும்பி விட்டோம்’’ என்றார்.
பிரேமா என்பவர் கூறும்போது, ‘‘நேபாள வெள்ள பாதிப்பு குறித்து அறிந்த நாங்கள் பெரும் துயரத்துக்குள்ளானோம்.
நாங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை ஒரு நாளைக்கு முன்னர் தான் கடந்திருந்தோம். அதனால் உயிர் தப்பினோம்’’ என்றார்.
இதற்கிடையே, கோவையில் இருந்து மற்றொரு குழுவில் சென்ற 8 பேர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால் உறவினர்கள் சோகமடைந்துள்ளனர்.