பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி முறையாக பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி!!

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி முறையாக பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திஷா) கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அத்தொகுதி எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் பங்கேற்று தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் இருப்பது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோபமாக கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இக்கூட்டத்தில் கங்கனா ரனாவத் பேசியதாவது: எனது தொகுதி நிதியின் கீழ் சுமார் ரூ.11 கோடி உள்ளது. இதில் சுமார் 90% நிதி செலவிடப்பட்டுவிட்டதாக என்னிடம் கூறப்பட்டது. ஆனால், சுமார் ரூ.50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

என்னிடம் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களும் உண்மையில் செலவிடப்பட்ட தொகையும் ஒன்றுக்கொன்று பொருந்த வில்லை. இதுதொடர்பாக, அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த நிதியில் 30 முதல் 40% வரை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு வழங்கப்பட்டதை சில விசாரணை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

அந்தப் பணத்தை அதிகாரிகளால் மீட்டெடுக்க முடியவில்லை. எம்.பி.யாக எனது செயல்பாடுகள் குறித்து தேசிய ஊடகங்கள் என்னை கேலி செய்கின்றன.

மண்டியில் நிறைவேற்றப்படாமல் உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுமக்கள் தினமும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதேநேரம், அதிகாரிகள் என்னைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மண்டியில் நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிப்பதோடு, நிதியை முறையாகவும் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *