மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது .
இருப்பினும் பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது வெகுவாக விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தனியாக போட்டியிட்டது தான் இதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது என்று தெரிவித்தார்.
ஆனால் முன்னாள் ஆளுநரும், தமிழக முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருந்தால் 25 முதல் 35 இடங்கள் கிடைத்து இருக்கும் என்று கூறியிருந்தார்.
அத்துடன் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனும் தோல்விக்கு அண்ணாமலையின் முடிவுகளும் தான் காரணம் என்று தனது வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் தமிழக பாஜக உட்கட்சியில் பிரச்சனை வெடிக்க தொடங்கியுள்ளது. அண்ணாமலையின் ஆதரவாளர்களும், தமிழிசையின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் அழைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக பாஜகவில் தமிழிசை மற்றும் அண்ணாமலை இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் அமித்ஷா மேடையில் தமிழிசையை கண்டித்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.