கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் ஓர் ஆண்டு சாதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை!!

சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் என்றால், அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் 07.05.2021 அன்று அமைக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்தையும், கல்வியையும் தன் இரு கண்களாக பாவித்து பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மருத்துவத்துறையின் பல்வேறு சாதனைகளில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் அறிக்கை.

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள உயர்சிறப்பு மருத்துவத்துறைகள்-இருதயவியல் மருத்துவத் துறை, இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைத்துறை. நரம்பியல் மருத்துவத் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, புற்று நோய் மருத்துவப்பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப்பிரிவு, இரைப்பை குடல் நோய் மருத்துவம், இரைப்பை குடல் நோய் அறுவைச்சிகிச்சைத்துறை, சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, ரத்தநாள அறுவை சிகிச்சை, நுண்துளை மூளை இரத்தநாள கதிரியல் பிரிவு ஆகிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்மருத்துவமனையில் சிறப்பு மருத்துவத்துறை பிரிவுகளாக அவசர சிகிச்சை, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, மைய ஆய்வகம், ரத்த வங்கி, கதிரியிக்கவியர் பிரிவு, இயன் முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு போன்ற பிரிவுகள் உள்ளன. இம்மருத்துவமனையில் உள்ள உயர்சிறப்பு மருத்துவ வசதிகள் இருதய கேத்லேப், மூளை ரத்தநாள கேத்லேப், அதிதீவிர சிகிச்சை பிரிவு, 15 உயர்சிறப்பு அறுவை அரங்குகள் போன்ற மருத்துவ வசதிகள் உள்ளன.

இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஆண்டு முடிவில் பயன் பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை-புறநோயாளிகள் 2,21,434, உள்நோயாளர்கள் 63,505, இதுவரை நடைபெற்ற அறுவை சிகிச்சைகள் 2,179, ஆஞ்கியோகிராம் 521, டயாலிசிஸ் 6,968, ஆய்வக பரிசோதனைகள் 7,72,558, சிடி.ஸ்கேன் 7,247, எண்டோஸ்கோப்பி 2,004, எக்ஸ்ரே 10,168, எக்கோ பரிசோதனைகள் 17,349 என்கின்ற எண்ணிக்கையில் ஓர் ஆண்டில் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் அறிவுறுத்தலின்படி, பல்வேறு உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 70 தனி அறைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டணப் படுக்கை குளிர்சாதன வசதி, வெந்நீர் உபகரணத்துடன் கூடிய தனி குளியல் மற்றும் கழிவறைகள், நவீன தீவிர சிகிச்சை பிரிவு கட்டில், அறையில் ஆக்சிஜன் மற்றும் மானிட்டர் உபகரணம், உடனிருக்கும் உறவினர் படுக்கும் சிறிய கட்டில் வசதி, செவிலியரை அழைக்கும் அமைப்பு மணி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாடுலர் அறுவை அரங்களானது நரம்பியல், புற்றுநோய், இருதய அறுவை சிகிச்சை, ரத்த நாள அறுவை சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் முற்றிலும் நோய் தொற்று நீக்கப்பட்டு நோயாளர்களுக்கு நோய் கிருமி தொற்று ஏற்படா வண்ணம் வசதி செய்யப்பட்ட அறுவை அரங்குகளாகும்.

மேலும் அறுவை அரங்குகளின் சுவர்கள் நோய் கிருமிகள் படியா வண்ணம் தனித்துவமான உலோகம் மற்றும் பூச்சுகளால் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் எனும் திருக்குறளுக்கு ஏற்ப மருத்துவத்துறையை கட்டமைத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளின் மூலம் பயனடைந்தோர் பல்லாயிரம் பேர் திராவிட மாடல் ஆட்சியை வாழ்த்தி நன்றி நவில்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *