வாலாஜா ;
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் குடுகுடுப்பு சமூகத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத நான்கு சிறுமிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூகநல பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய் மற்றும் சமூகநலப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளிடம், பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் பேசி பெற்றோர்களை சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நான்கு சிறுமிகளை வேலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத காரணத்தினால் இது போன்ற திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதன் மீது அரசு கவனத்தில் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.