பிரதமர் மோடியுடனான  போப் சந்திப்பு குறித்து அவதூறு பதிவு …. பகிரங்க  மன்னிப்பு கேட்ட கேரள காங்கிரஸ்…

திருவனந்தபுரம்;

கேரள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இத்தாலி சென்ற போது அங்கு போப் பிரான்சிஸுடன் அவர் சந்தித்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “இறுதியாக, போப்பிற்கு கடவுளைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது” என பதிவிட்டது.

இந்தப் பதிவின் மூலம் காங்கிரஸ் கட்சி, கிறிஸ்துவ சமூகத்தை அவமதிப்பதாக கேரள மாநில பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜார்ஜ் குரியன் கூறுகையில்,

“காங்கிரஸின் இந்த ட்வீட் பிரதமர் மோடியை, இறைவன் யேசுவுடன் ஒப்பிடுகிறது. இது முற்றிலும் தேவையற்றது மற்றும் யேசுவை மதிக்கும் கிறிஸ்தவ சமூகத்தை அவமதிப்பதாகும். காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்திருப்பது வெட்கக்கேடானது” என்றார்.

இதேபோல், அம்மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் கூறுகையில்,

“போப்பையும் கிறிஸ்துவ சமூகத்தையும் கேலி செய்யும் அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்து விட்டது” என்றார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில், கேரள காங்கிரஸ் நேற்று இரவு மன்னிப்பு கோரியது. மேலும், எந்த மதத்தையும் அவமதிப்பது எங்களது மரபு அல்ல என்றும் அக்கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி மீண்டும் வெளியிட்ட மற்றொரு பதிவில், “எந்த மதத்தையும், மத குருமார்களையும், சிலைகளையும் இழிவுபடுத்துவது இந்திய தேசிய காங்கிரஸின் மரபு அல்ல என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். காங்கிரஸ் அனைத்து மதங்களையும், நம்பிக்கைகளையும் ஒன்றிணைத்து மக்களை நட்பு ரீதியான சூழலில் முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாகும்.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளைப் போலக் கருதும் போப்பை அவமதிக்கும் எண்ணத்தை எந்த காங்கிரஸ் தொண்டர்களும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டு இந்த நாட்டின் விசுவாசிகளை இழிவுபடுத்தும் நரேந்திர மோடியை கேலி செய்வதில் காங்கிரஸுக்கு எந்த தயக்கமும் இல்லை. எங்கள் பதிவு கிறிஸ்தவர்களுக்கு ஏதேனும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *