சென்னை தியாகராய நகரிலுள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன் ,சுதாகர் ரெட்டி , மத்திய அமைச்சர் எல்.முருகன் , மாநிலத் தலைவர் அண்ணாமலை , நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன் , பொன். ராதாகிருஷ்ணன் , எச் ராஜா உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “பள்ளிகளில் சாதி பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு அரசுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகள் பெரும்பான்மை சமூகத்தை குறிவைக்கும் வகையில், பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக உள்ளது.
மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கொடுக்க வேண்டும் என சொல்வோர், இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, கோயிலில் கொடுத்த கயிறுகளை கட்டக் கூடாது என்பது தவறு. நெற்றியில் திருநீறு, குங்குமம் வைக்க கூடாது என அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
நான் சிவப்பு கயிறு கட்டியுள்ளேன், இது எந்த சாதிக்கான கயிறு? என் அருகில் இருப்பவர் கருப்பு கயிறு கட்டியுள்ளார்… அது எந்த சாதிக்கு அடையாளம்?
பள்ளி அருகேயுள்ள பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களை அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியர்களாக பணியமர்த்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது தவறு. ஏதோ உள்நோக்கத்துடன் நீதிபதி சந்துரு பரிந்துரைகளை கொடுத்துள்ளார்.
நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் என அரசிடம் பாஜக சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம். பாஜக 9 தொகுதியில் 2 வது இடம் பெற்றுள்ளது. வாக்கு விகிதம் உயர்ந்துள்ளது குறித்து இன்று பேசினோம்.
திமுக வாக்கு வங்கி இந்த தேர்தலில் 6 சதவீதம் குறைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி மேலும் குறையும்” என்றார்.