எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்ததால் வெற்றி பெற்றாரே தவிர நடிகராக இருந்ததால் வெற்றி பெறவில்லை : கி.வீரமணி!!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் 4 நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது. இதில் பங்கேற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு 3 கிரிமினல் சட்டங்களை மாற்றுவதற்கு முன்பு இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள், மக்கள் மத்தியில் நீண்ட விவாதம் நடத்தியிருக்க வேண்டும். நாடாளுமன்ற இரு அவைகளில் விவாதித்திருக்க வேண்டியது அதைவிட முக்கியமானது.

எதையும் பொருட்படுத்தாமல் சர்வாதிகார ஆட்சிபோல் நடப்பது சரியல்ல. சட்டங்களை மாற்றியது மட்டுமின்றி சமஸ்கிருதம், இந்தி திணிப்பையும் இதன் மூலம் செய்துள்ளனர். சட்டத்தின் பெயரை ஆங்கிலத்தில் இல்லாமல் செய்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

அரசு தன்னையும், தனது நிலைப்பாட்டையும் மாற்றிக்கொள்ள வேண்டும். கருத்துகளை யார் வேண்டுமானாலும் சொல்ல உரிமை உண்டு. கட்சி தொடங்குவதற்கும் யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு.

அதேபோல் நீட் தேர்வு குறித்து கருத்துக் கூறவும், கட்சி தொடங்கவும் நடிகர் விஜய்க்கு உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், நடிகர்களாக இருந்தாலே அரசியலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்து தவறானது.

எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்ததால் வெற்றி பெற்றாரே தவிர நடிகராக இருந்ததால் வெற்றி பெறவில்லை. சிவாஜி கணேசன் முதல் பல நடிகர்கள் கட்சி தொடங்கி தோல்வியடைந்துள்ளனர்.

ஒரு கட்சி, இயக்கம் ஆரம்பிக்கும்போது முதலில் கொள்கையை அறிவிப்பதுதான் நடைமுறை. ஆனால் இப்போது, கட்சி ஆரம்பித்துவிட்டு, பின்னர் கொள்கையை சொல்கிறேன் என்பது முரண்பாடானது. நல்ல கருத்தை யார் சொன்னாலும் வரவேற்போம்.

தோற்றுப் போனவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் கட்சி பாஜக. 400 தொகுதிக்கு மேல் எதிர்பார்த்தவர்கள் நாற்காலிக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொன்னவர்கள் வெற்றிபெற்று காட்டியுள்ளனர்.

விஷச் சாராயம் தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் உள்ளது. அதற்காக அதை நியாயப்படுத்தவில்லை. கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்துள்ளது.

சட்டங்களை கடுமையாக்கி உள்ளனர். தண்டனையை உயர்த்தியுள்ளனர். நீட் தேர்வு முகமை என்பது நீதியை சிதைத்துள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு என்ன பதிலை பாஜக தலைவர் சொல்லப் போகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *