தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட் சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும்!!

எல்லா நாட்களிலும் நாம் இறைவனை வழிபடுவோம் என்றாலும், இறைவனை வழிபடுவதற்காகவே நம் முன்னோர்கள், சில மாதங்களை வரையறை செய்து வைத்துள்ளனர். அதில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகியவை அடங்கும். இதில் பெருமாளை வழிபடுவதற்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது.

பெருமாள் மட்டுமின்றி, அம்பாளுக்குரிய நவராத்திரி விரத நாட்களும், புரட்டாசி மாதம் தான் வருகிறது. அதோடு முன்னோர்களை வழிபடும் ‘மகாளய அமாவாசை’, சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் ‘கேதார கவுரி விரதம்’ என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக இந்த புரட்டாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் சில விரதங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

விநாயகர் விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர ‘துர்வாஷ்டமி விரதம் என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது.

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

மகாலட்சுமி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.

அமுக்தாபரண விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமாமகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடு) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.

ஜேஷ்டா விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் ‘மூதேவி’ என்றும் அழைப்பார்கள்.

சஷ்டி-லலிதா விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்து கடை பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.

கபிலா சஷ்டி விரதம்

புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.

மகாளய பட்சம்

புரட்டாசி பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மகாளய பட்சம் ஆகும். இந்த காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியம். இதுநாள் வரை முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் கூட, இந்த மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால், முழு பலனையும் பெற முடியும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *