தமிழகம் முழுவதும் கனமழையால் 891 குளங்கள் நிரம்பின!!

சென்னை:
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சுமார் 60 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. 38 மாவட்டங்களில் உள்ள மொத்த ஏரிகளில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. தொடங்கியது முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே நிரம்பியுள்ள நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வெளியேறும் நீர்நிலைகளை உன்னிப்பாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அணைகள், நீர்த்தேக்கங்கள், குளங்களில் உள்ள நீர்இருப்பு குறித்து நீர்வள ஆதாரத் துறை தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24,927 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 33,661 மில்லியன் கனஅடி (59.59 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது.

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் மொத்தம் 14,139 குளங்கள் உள்ளன. இவற்றில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. அதில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 310 குளங்கள் நிரம்பியுள்ளன.

1,832 குளங்களில் 99 சதவீதமும், 2,096 குளங்களில் 51 முதல் 75 சதவீதமும், 2,801 குளங்களில் 26 முதல் 50 சதவீதமும், 4,949 குளங்களில் ஒன்று முதல் 25 சதவீதமும் நீர்இருப்பு உள்ளது. 1,570 குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இவ்வாறு நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *