கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை – கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு!!

பெங்களூரு:
கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி அடுத்த மரகும்பி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (42). இவர் அங்குள்ள திரையரங்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு காட்சிக்கு டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

ஆயுதங்களால் தாக்குதல் இதற்கு அப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள்தான் காரணம் என்று கருதிய மஞ்சுநாத், தனது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என 100-க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு, அதிகாலை 4 மணி அளவில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்டோரை ஆயுதங்கள், தடிகளால் தாக்கியுள்ளனர். அங்கு உள்ள 120-க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடி, தீவைத்து கொளுத்தினர்.

இந்த தாக்குதலில் 60 பேர் படுகாயமடைந்து, கொப்பல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது, கர்நாடகாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மஞ்சுநாத் உள்ளிட்ட 117 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு 3(1), இந்திய தண்டனை சட்ட பிரிவு 504, 506 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கங்காவதி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

10 ஆண்டுகளாக விசாரணை: கொப்பல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில், 35 நேரடி சாட்சிகளின் வாக்குமூலம் அடிப்படையில் அரசு தரப்பு வழக்கறிஞர் அபர்ணா புந்தி வாதிட்டார். தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த‌ மருத்துவர்களின் சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

தீண்டாமை கொடுமைகள்: மரகும்பி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்ட அனுமதி மறுக்கப்பட்டது, உணவகத்தில் சாப்பிட அனுமதி மறுத்தது ஆகிய தீண்டாமை கொடுமைகளையும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்த கொப்பல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சி.சந்திரசேகர் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது: மர‌கும்பி கிராமத்தில் நடந்தது அப்பட்டமான சாதி ரீதியான வன்முறை என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 117 பேரும் குற்றவாளிகள் என்பது அரசு தரப்பில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதில் 16 பேர் விசாரணையின்போதே உயிரிழந்துவிட்ட‌னர். முதல்குற்றவாளியான மஞ்சுநாத் உள்ளிட்ட 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடையாத 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

குறைந்த அளவில் அபராதம்: குற்றவாளிகள் அனைவரும் சாதாரண பொருளாதார பின்புல‌ம்கொண்டவர்கள் என்பதால் குறைந்த அளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேநேரம், பட்டியலின மக்கள் தடிகளாலும், கூரான ஆயுதங்களாலும் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதே, உரிய‌நீதியாக இருக்கும். எனவே உச்சபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹரிராம் என்பவர் கூறும்போது, “மரகும்பியில் திட்டமிட்டு பட்டியலின மக்கள் மீது மற்றொரு சாதியினர் வன்முறை தாக்குதல் நடத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

கொப்பலில் இருந்து பெங்களூருவுக்கு பாதயாத்திரை சென்று போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதில் வீரேஷ் என்ற பட்டியலின செயற்பாட்டாளர் படுகொலை செய்யப்பட்டார். இருப்பினும் பட்டியலின மக்கள் அஞ்சாமல், தொடர்ந்து போராடியதால், 10 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது” என்றார்.

கர்நாடகாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

முன்னதாக, குற்றவாளிகள் 101 பேரும் கொப்பலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *