மாணவர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன் !!

மாணவர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவொற்றியூர் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியில் இரண்டாவது முறை வாயுக்கசிவு – உரிய ஆய்வை மேற்கொள்ளாமல் பள்ளியை திறக்க அனுமதித்து மாணவ, மாணவியர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாயுக்கசிவால் 30க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வாயுக்கசிவால் பாதிப்புக்குள்ளான இதே தனியார் பள்ளியில் ஆய்வை மேற்கொண்டு உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தாமல் மீண்டும் அப்பள்ளியை திறக்க அனுமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த முறை ஏற்பட்ட வாயுக்கசிவை தீயணைப்புத்துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு செய்த நிலையில், அதற்கான முழுமையான விவரங்கள் தற்போது வரை வெளிவராத சூழலில் அவசரகதியில் மீண்டும் பள்ளியை திறந்து மாணவ, மாணவியர்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டிய அவசியம் என்ன?

எனவே, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, வாயுக்கசிவிற்கான காரணம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அப்பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *