பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எங்களை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். அதிமுக ஆட்சி பற்றி முதல்வர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். முதல்வரை நான் கொச்சைப்படுத்தி பேசியதாக என்னை விமர்சித்துள்ளார்.
அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடக்கிறது என கூறினார்.