நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகல்!!

கோவை:
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கோவை மாவட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன். இவர் இன்று தான் வகித்து வந்த, மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருடன் கோவை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏழுமலை ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர்.

கட்சியில் இருந்து விலகியது குறித்து நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் கூறியதாவது:-

கடந்த 10 வருடமாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணித்தோம். சீமான் முதலமைச்சர் ஆவார். அதற்கான வெற்றி இலக்கை அடைவார் என்ற நோக்கிலேயே நாங்கள் தீவிரமாக களப்பணியாற்றி வந்தோம்.

ஆனால் சமீப காலமாக சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். செயல்பட்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்தியர் சமூகத்தின் பங்கு என்பது மிகப்பெரியது.

அப்படிப்பட்டவர்களை பார்த்து சீமான் வந்தேறிகள் என்று பேசியது பெரிய பிரச்சனையாக மாறியது. மேலும் எங்களது உறவினர்கள் ஏராளமானோர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் உள்ளனர்.

இதற்கு பிறகு அவர்களும் எங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். சீட் தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவது முற்றிலும் தவறானது.

சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம். எங்களை தொடர்ந்து இன்னும் கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள நாம்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து விலகுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *