சென்னை:
வீட்டு மனை முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு சென்னை திருவான்மியூரில் வீட்டு மனைகளை மாநில அரசு ஒதுக்கீடு செய்தது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அப்போதைய வீட்டுவசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் முருகையா, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், டி.உதயக்குமார், ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இதில், அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கு மட்டும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பெரியசாமி மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதி வேல்முருகன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் கூறியதாவது: அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. வீடுகள் ஒதுக்கியதில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் என்பதால், வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், பேரவை தலைவர் அனுமதி அளித்தது தவறு. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘எதிர் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’’ என்று கூறி, இந்த மனுவுக்கு டிசம்பர் 19-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.