திருவண்ணாமலையில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்!!

வேங்கிக்கால்:

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகர் வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள் மாட வீதியில் உலா வந்தனர்.

பக்தர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து சென்றனர். இதில் சுற்றியுள்ள பகுதி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 3 மணிக்கு மேல் 5-ம் பிரகாரத்தில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

6 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பக்தி இன்னிசை மற்றும் பரதநாட்டியம் நடைபெற உள்ளது. இரவு வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளி தேரில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன் சண்டிகேஸ்வரர் மாட வீதியில் பவனி வருகின்றனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நாளை நடைபெற உள்ளது.

அப்போது பக்தர்களின் பாதுகாக்கவும், தேர்பவனியின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

மேலும் குற்ற செயல்களை கண்காணிக்க மாட வீதிகளிலும், கிரிவலம் பாதையிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர் செல்லும் அசலியம்மன் கோவில் தெரு, பேகோபுரம் 3-வது தெரு, பேகோபுரம் பிரதான சாலை, கொசமடை வீதிகளில் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தேர் திரும்பும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.

தேர் மீது சில்லறை காசுகள், தண்ணீர் பாட்டில், தானியங்கள் உள்ளிட்டவை வீசக்கூடாது. பக்தர்கள் 4 கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப் பாதையிலோ கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *