வரும் 2025-ம் ஆண்டு முதல் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு பொது விடுமுறை தினங்கள் தவிர, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் முழு நாள் விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு வரும் 2025-ம் ஆண்டுமுதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான விடுமுறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், பொதுவிடுமுறை மட்டுமே வங்கிகளுக்குப் பொருந்தும். அரசு விடுமுறை என்பது தமிழக அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, அரசாணையில் குறிப்பிட்டுள்ள சனி, ஞாயிறு விடுமுறை என்பது அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும். வங்கிகளுக்குப் பொருந்தாது.
எனவே, வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என்பது தவறான தகவல். சனிக்கிழமை விடுமுறை அளிப்பது என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும்’’ என்றனர்.