வனப் பாதையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கான முன்னுரிமை தரிசனம் திடீர் ரத்து…. முறையாக செயல்படுத்த முடியாத நிலையில் தேவசம்போர்ட் அறிவிப்பு…

எருமேலி ;

வனப் பாதை வழியே சபரிமலைக்குப் பாதயாத்திரையாகச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், புல்மேடு மற்றும் எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை எனப்படும் பாரம்பரிய வழித்தடத்தில் செல்கின்றனர்.

இதில் எருமேலி வனச்சாலை அழுதா நதியில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரம் கடுமையான ஏற்ற, இறக்கத்துடன் கூடிய, கரடு முரடான பாதையாகும். இந்த பாதையை  கடும் சிரமத்துடன்  ஐயப்ப பக்தர்கள் கடந்து சந்நிதானத்துக்குச் செல்கின்றனர்.

இவ்வாறு வரும்போது சந்நிதானத்தில் மீ்ண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால், தங்களை முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையேற்ற தேவசம்போர்டு, கடந்த 18-ம் தேதி முதல் வனப் பாதையில் வரும் பக்தர்களுக்காக சிறப்பு தரிசன திட்டத்தைச் செயல்படுத்தியது. இதனால், மண்டல பூஜையின் நிறைவுகாலத்தில் பலரின் தரிசனம் எளிதாக இருந்தது. ஆனால், மகரவிளக்கு பூஜை காலம் தொடங்கிய முதல் நாளில் பாதயாத்திரை பக்தர்களின் வருகை பெரிதும் அதிகரித்தது. இதையடுத்து, சிறப்புத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேவசம் போர்டு உறுப்பினர் ஒருவர்  கூறும்போது, “தற்போது சந்நிதானத்தில் பக்தர்களின் கூட்டம் வெகுவாய் உயர்ந்துள்ளது. வனப் பாதையில் வரும் பக்தர்களைச் சிறப்பு வரிசையில் அனுமதிப்பதால், மற்ற பக்தர்கள் பல மணி நேரம் கூடுதலாகக் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வனப்பாதை வழியாக அதிகபட்சமாக 5 ஆயிரம் பேர் வருவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பக்தர்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்துவிட்டது. இதனால், இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

தேவசம்போர்டின் இந்த முடிவு வனப் பாதையில் வரும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “முன் அறிவிப்பின்றி திடீரென்று ரத்து செய்யப்பட்டதால, சபரிமலைக்கு பாரம்பரிய வன பாதையில் வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பல ஆண்டு கோரிக்கை இது. ஆனால், சில வாரங்கள்கூட செயல்படுத்த முடியாத நிலையில்தான் நிர்வாகத்தின் செயல்பாடு இருக்கிறது. ரத்து அறிவிப்பு தெரியாததால் பக்தர்களுக்கும், போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம்தான் ஏற்பட்டு வருகிறது” என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *