சென்னை:
சட்டப்பேரவையை திட்டமிட்டே ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டிய ஆளுநர், தேசிய கீதத்தை பாடவில்லை என்று கூறி வெளியேறி இருப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழக அரசு தயாரித்துள்ள உரையை வாசிக்காமலேயே வெளியேறிவிட வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து நிறைவேற்றி காட்டியிருக்கிறார். சட்டப்பேரவையை அவமதித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் கண்டனத்துக்குரியது. அரசியல் கட்சி பிரதிநிதிபோல ஆர்.என்.ரவி செயல்படுவது அவர் வகித்து வரும் அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றதல்ல.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும் செயல்படுத்தப் படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன.
அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து அரசின் கொள்கையை எடுத்துக்கூறும் உரையை ஆளுநர் வாசிப்பது வழக்கமான நடைமுறை.
இதை தமிழக ஆளுநர் மூன்றாவது முறையாக நிராகரித்து பேரவையில் இருந்து வெளியேறி உள்ளார். இது தமிழகத்தில் நிலவிவரும் அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: சட்டப்பூர்வமான கடமையை நிறைவேற்றாமல் இன்றைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மரபுகளை மதிக்காமலும், ஆளுநருக்கு உள்ள கடமைகளை நிறைவேற்றாமலும் மத்திய பாஜக அரசு விரும்புகிறபடி நடந்து கொள்வதை ஆளுநர் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் புதிய சட்டத்தையும், மரபுகளையும் உருவாக்க முயற்சி செய்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் ஆளுநர் உரை தொடங்கும். அதைத்தொடர்ந்து நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். இதுதான் வரலாறு. அதனால் ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தது தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.