சென்னை:
நடிகர் விஷால் நலமுடன் அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது திரைப்படம் மதகஜராஜா. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால், சுந்தர் சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் விஷால் பேசும்போது கை நடுக்கத்துடனும் பதட்டமாகவும் பேசினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆயிற்று என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். நீண்ட நேரம் பேசமுடியாமல் ஒருவித உடல் சோர்வுடன் காணப்பட்டார் நடிகர் விஷால்.
இதனையடுத்து அவர் அதீத வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும் அதையும் பொருட்படுத்தாமல் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
என மேடையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கூறினார். அதையும் மீறி விஷாலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்து நடிகர் விஷால் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்களும் வேண்டிக்கொண்டனர்.
இந்த நிலையில் விஷால் உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வந்த நிலையில் இதுகுறித்து அவரது மருத்துவர் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார்.
அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் நடிகர் விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முற்றிலுமாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனை அடுத்து அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணனை தொடர்பு கொண்டு விசாரிக்கையில், விஷால் நலமுடன் இருக்கிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் இரு தினங்கள் ஓய்வுக்கு பிறகு துப்பறிவாளன் 2 பட வேலைகளில் ஈடுபட உள்ளதாக அவர் நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் மதகஜராஜா படத்தினை ரசிகர்களோடு பார்க்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.