பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்!!

சென்னை:
பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறை முடிந்த நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள் முற்றிலுமாக சென்னை திரும்பினர். இதனால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நடப்பாண்டு பொங்கல் பண்டிகையின்போது சுமார் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் கடந்த 10-ம் தேதி முதல் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணிக்கத் தொடங்கினர்.

இதற்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் அரசு பேருந்துகளில் மட்டும் ஜன.10 முதல் 14-ம் தேதி அதிகாலை வரை 8.72 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணமாகியிருந்தனர்.

இவர்கள் திரும்பி வருவதற்கு ஏதுவாக ஜன.15, 16, 18, 19 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே ஊர் திரும்ப வேண்டும் என பயணிகளுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தியது.

இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்படாத நாளிலும் (ஜன.17) பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து விடுப்பு அடிப்படையில் பலரும் ஊர் திரும்பத் தொடங்கினர்.

இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு மேலாகவே தொடர் போக்குவரத்து நெரிசலை காண முடிந்தது.

இதனால் ஜிஎஸ்டி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, வண்டலூர்- கேளம்பாக்கம் சாலை போன்ற முக்கிய சாலைகளில் நேற்று வரை கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து 3 நாட்களுக்கும் மேலாக சென்னைக்கு வரும் நிலையில், நேற்றும் புறநகரில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட எல்லையான அச்சரப்பாக்கம் ஆத்தூர் மற்றும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம், செங்கல்பட்டு காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆம்னி பேருந்துகள் மாநகருக்குள் வராமல் நேரடியாக வண்டலூர் வெளிவட்ட சாலையில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் பெருமளவில் நெரிசல் ஏற்படவில்லை.

சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, தாம்பரம் போன்ற இடங்களில் மட்டும் சாலை குறுகிய இடம் என்பதால் அவ்வப்போது நெரிசல் ஏற்பட்டது.

சொந்த வாகனங்களில் ஊர் திரும்புவோரால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், அரசு பேருந்துகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இதில் வருவோரின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இன்று அதிகாலை முதல் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. இவ்வாறு இன்று வரை வருவோருக்கான போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் நிலையங்கள்: இது ஒருபுறமிருக்க சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. தென், மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி காலை வந்த அனைத்து விரைவு ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் நிலையங்களில் ஏராளமான பயணிகள் இறங்கினர். இதுபோல, சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில்களிலும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ரயில்வே போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *