ஈரோடு ;
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
காலை 11 மணிக்கு முதல் நபராக அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார்.
அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். மாலை 3 மணி வரை 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில் 47 பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் வெளியிட்டுள்ளார்.
வெளி மாநிலத்தை சேர்ந்த வேட்பாளர் மனு கடைசி நேரத்தில் நிராகரிப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது.