புதுடெல்லி,
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியாக ரேகா குப்தா இன்று பதவியேற்றார். முதல் மந்திரியுடன் 6 மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவிற்கு வாழ்த்துகள். அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து, வளாக அரசியல், மாநில அமைப்பு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு, தற்போது எம்.எல்.ஏ.வாகவும், முதல்-மந்திரியாகவும் உள்ளார். டெல்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீரியத்துடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன். அவரது பதவிக்காலம் பலமாக அமைய எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும் டெல்லி மந்திரிகளாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் என வாழ்த்துகள். இந்தக் குழு வீரியத்தையும் அனுபவத்தையும் அழகாகக் கலந்து, டெல்லிக்கு நல்லாட்சியை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.