சென்னை:
ரயில்கள், ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடுதல் காவலர்கள் நியமனம், சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக ரயில்வே காவல் துறை திட்டமிட்டுள்ளது.
கோவை – திருப்பதி விரைவு ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கீழே தள்ளிவிட்ட சம்பவம், சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து, ரயில்களில் பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இரவு 10 மணிக்கு பிறகு புறப்படும் ரயில்களில் ரயில்வே போலீஸார், ஆர்பிஎஃப் போலீஸார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, மகளிர் பெட்டியில் பெண் காவலரை பணியமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே காவல் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே காவல் துறை சென்னை மாவட்டத்தில், 23 ரயில்வே காவல் நிலையங்கள், 4 புறநகர் ரயில் நிலையங்களில் மொத்தம் 900 காவலர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 700 பேர் பணியாற்றுகின்றனர். அதற்கு தேவையான 200 பேரை பெற வேண்டும்.
இதுதவிர, 500 காவலர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும். ரயில்வே காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் 50 உதவி காவல் ஆய்வாளர்களை பணியமர்த்த வேண்டும்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து நிலையங்களிலும் பொருத்த திட்டமிட்டுள்ளோம். மகளிர் பெட்டிகளில் பெண் காவலரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக தமிழக காவல் துறைக்கு ரயில்வே காவல் துறை தரப்பில் பரிந்துரை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் குழ: ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு’ என்ற பிரத்யேக வாட்ஸ்அப் குழுவை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், வழக்கமாக ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், மாதாந்திர டிக்கெட் எடுத்து பயணிக்கும் பெண்கள் மட்டுமின்றி, ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே அதிகாரிகளும் உறுப்பினராக இருப்பார்கள். பெண் பயணிகளின் அவசர உதவிக்கு இது பயன்படும் என்று அதிகாரிகள் கூறினர்.