கொளத்​தூரில் ரூ.60 லட்​சத்​தில் வாகன நிறுத்​தம், உணவு அருந்து​மிடம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை!!

சென்னை:
முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் முதல்வர் படைப்பகம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 4 மாதங்களை நிறைவு பெற்றுள்ள நிலையில், அங்கு ரூ.60 லட்சத்தில் வாகன நிறுத்தம் மற்றும் உணவு அருந்துமிடம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொழிற்கல்வி பெற்றவர்கள் புத்தொழில் நிறுவனங்களை தொடங்க, உட்கட்டமைப்பு மற்றும் அதன் பராமரிப்புக்காக பெருந்தொகையை செலவிட வேண்டியுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தயாராக விலை உயர்ந்த நூல்களை வாங்கி படிக்க முடியாத நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு புத்தொழில் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகமாக பயன்படுத்தவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், தமிழக அரசு சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 85 லட்சம் செலவில் `முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space), முதல்வரின் தொகுதியான கொளத்தூர் ஜெகந்நாதன் தெருவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கிவைத்தார்.

இக்கட்டிடம் தரைத் தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்டுள்ளது. தரை தளத்தில் `பகிர்ந்த பணியிட சேவை’ வழங்கப்படுகிறது. இதில் மென்பொருள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனம் நடத்துவோர் 38 பேர் பணியாற்றும் வகையில் இருக்கைகள், மேசைகள் போதிய இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 4 மற்றும் 6 இருக்கைகள் கொண்ட 3 ஆலோசனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6 பேர் அமரக்கூடிய வகையில் உயர்தர சோபா இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் தளம் கல்வி மையமாக செயல்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 51 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2-ம் தளம் தேநீர் மற்றும் உணவருந்தும் கூடமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கேயே உணவு சமைத்து விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல்வர் படைப்பகம் நேற்றுடன் 4 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஏராளமானோர் முதல்வர் படைப்பகத்தை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர்.

இதை மேலும் மேம்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் 2-வது தளத்தில் நவீன கூரையுடன் கூடிய உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம், சிசிடிவி கண்காணிப்பு வசதி ஆகியவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *