பொள்ளாச்சி:
ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பதற்கு நிறைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. படிப்பு, வேலை, தொழில் தன்னம்பிக்கை, குடும்பம் என எல்லாவற்றிலும் ஆண்களை விட பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றால் அது மிகையாகாது.
இதனால் தான் பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவே மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
தாயாக, மனைவியாக, மகளாக என ஒரு சமூகத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பெண்கள்தான். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றாலும் சரி.. ஒரு குடும்பத்தில் தலைமுறையே உயர வேண்டும் என்றாலும் பெண்களின் கல்வி அவசியமானது என்று மூத்தோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.
அந்த வகையில், ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் உள்ளார் கனிமொழி கதிர்வேல்.
விளாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி. இவர் உடுமலையைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
MA B.Ed படிப்பை முடித்த ஆசிரியராக பணியாற்றிய கனிமொழி தற்போது இரவு நேரங்களில் இயங்கும் தனியார் ஆம்னி பேருந்தை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இயக்கி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இவர் அழகன் டிராவல்சில் பொள்ளாச்சி- சென்னைக்கு இரவு நேரத்தில் ஆம்னி பேருந்தை இயக்கி வருகிறார். பல சிரமங்களை சந்தித்தாலும் தினந்தோறும் 620 கி.மீ. பேருந்துடன் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.