மதுரை:
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எந்தவித சாதி பாகுபாடும் கிடையாது. அனைவரும் சம தர்மமாக இயக்கத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். ஆனால் ஒட்டுமொத்த தொண்டர்களும், நிர்வாகிகளும் எடப்பாடியார் பின்னால் அணிவகுத்து நின்றார்கள்.
எடப்பாடியாரிடம் ஆளுமை திறன் உள்ளது. இதே பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்தார்.
ஆனால் எந்த ஒரு முடிவையும் உடனே எடுக்கமாட்டார். பன்னீர்செல்வத்தை இரண்டாம் இடத்திற்கு தகுதியானவராக இருந்தாரே தவிர, முதல் இடத்திற்கு தகுதி அவரிடம் இல்லை. அதே போன்று முடிவெடுப்பதில் ஆளுமை அவரிடம் எதுவும் இருக்காது.
பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்தபோது, அவரை பார்க்க சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள் என அனைவரும் காத்திருப்பார்கள். அவர்களிடம் 10 நிமிடம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று போய்விடுவார்.
இதே எடப்பாடியார் அமைச்சராக இருந்த பொழுதும் சரி, முதலமைச்சர் இருந்த போதும் சரி உடனடியாக அதற்கு தீர்வு காண்பார்.
ஜெயலலிதா இருக்கும்போது ஒரு வேலையை மற்றவர்களை பார்க்க வைத்து அதை தான் செய்தது போல அம்மாவிடம் பேர் வாங்கிக் கொள்வார். அவர் இருக்கும்போதே பன்னீர்செல்வத்தின் மீது கட்சியினர் நம்பிக்கை இழந்தனர்.
அவரது மறைவுக்குப் பின்பு இந்த ஆட்சி ஒரு மாதம் கூட தாங்காது என்று கூறினார்கள். ஆனால் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை எடப்பாடியார் செய்தார்.
அதுமட்டுமல்ல 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கவர்னரை சந்தித்தார்கள். உடனடியாக அவர்களை தகுதி நீக்கம் செய்து இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்.
தினகரனை நம்பி சென்ற அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் பாதி பேர் கடனாளியாக உள்ளனர், பாதி பேர் கட்சியில் இல்லை, மீதி பேர் தி.மு.க.வில் சேர்ந்து விட்டார்கள்.
இன்றைக்கு தி.மு.க.வும், பன்னீர்செல்வம் உட்பட பலர் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதாக ஒரு தவறான பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள்.
கட்சி பலவீனமாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோபி, சிவகாசியில் தான் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லி கருணாநிதி அப்போது மத்திய அரசிடம் கூறி ஆட்சியை கலைத்தார். பின்னர் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். மறையும் வரை முதலமைச்சராக இருந்தார்.
அதேபோன்று 1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்த பின்பு கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று கூறினார்கள். ஆனால் 2001, 2011, 2016 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
அதேபோல் இன்றைக்கு பழைய பல்லவியைதான் பாடி வருகிறார்கள். நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.