சென்னை:
தமிழக அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் பட்ஜெட் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.: தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்வை.
தமிழ் மொழி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பல்வேறு சோதனைகள், அடக்குமுறைகளைத் தாண்டி, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு உதாரணம் தமிழக பட்ஜெட். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கியிருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசுவைப் பாராட்டுகிறேன்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் நிதி உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.
பழைய ஓய்வூதியத் திட்டம், 12 லட்சம் அரசு காலி பணியிடங்களில் 4 ஆயிரம் மட்டுமே நிரப்புவது, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்வு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இரு மொழிக் கொள்கையில் உறுதி காட்டி வருவதும், வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பதும் பாராட்டத்தக்கது. ஒப்பந்தப் பணியாளர்களுக்கு அறிவிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் மின் கட்டணத்தில் சலுகை கோரி வருவதையும், நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
மதிமுக பொது ச்செயலாளர் வைகோ: நிதிநிலை அறிக்கை “எல்லோருக்கும் எல்லாம்” எனும் திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுப்பதாக அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. கல்வி, நீர்வளம், சுற்றுச்சூழல் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது.
கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன்: அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கல்வி, தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர், நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்.
சட்டப்பேரவை விசிக தலைவர் சிந்தனைச் செல்வன்: நிதி நெருக்கடி, பேரிடர்கள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது.
விளிம்புநிலை மக்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதும், சமூக நலன், மகளிர் மேம்பாட்டுக்காக திட்டங்களை அறிவித்துள்ளதும் பாராட்டுக்குரியது.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: தமிழ் மொழி, மக்களின் மேம்பாட்டுக்கான நிறைய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பு. ஈழத் தமிழர் சகோதரர்களுக்கு இரட்டை குடியுரிமை ஆகிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.