சென்னை;
டாஸ்மாக் மெகா ஊழலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய மது ஆலைகளில் கடந்த 6-ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘ ‘எஸ்.என்.ஜே, கால்ஸ், அக்கார்டு, சஃபில், ஷிவா டிஸ்டில்லரீஸ் ஆகிய மது ஆலைகளும், தேவி பாட்டில்ஸ், கிரிஸ்டல் பாட்டில்ஸ், ஜி.எல்.ஆர் ஹோல்டிங்ஸ் ஆகிய பாட்டில் நிறுவனங்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து ரூ.1000 கோடி கணக்கில் வராத பணத்தை ஒதுக்கியுள்ளன.
டாஸ்மாக் நிறுவனத்திடம் கூடுதலாக மது வழங்கும் ஆணை பெறுவதற்காக கையூட்டு வழங்க இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒதுக்கீடு, மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, பணியாளர்களை பணியிடமாற்றம் செய்ய கையூட்டு வாங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் ஊழலை கண்டித்து உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
தடையை மீறி போராட்டம் நடத்தச் சென்ற அவரை, சென்னை அடுத்த அக்கரை அருகே போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் மீதான ஊழல் புகாரில் போராட்டம் நடத்த எழும்பூர் நோக்கி சென்றபோது பாதி வழியில் கைது செய்யப்பட்டார்.