“நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்ய நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் ஒன்றிணையும் இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்” – முதல்வர்கள், தலைவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பதிவு!!

சென்னை:
“நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்ய நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் ஒன்றிணையும் இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக இன்று மார்ச் 22-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க வருகைதந்துள்ள மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் எக்ஸ் தளத்தில் டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாள் இது. இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், “நாங்கள் அனைவரும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைகிறோம். எங்கள் சுயலாபத்துக்காக அல்ல. எங்கள் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன.

அப்படியிருக்க மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து கல்வி வளர்ச்சி, மக்கள் தொகை கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என பங்களிப்பு செய்யும் மாநிலங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கட்டவிழ்க்க முயற்சிக்கிறது.

நாங்கள் ஒருபோதும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். எங்கள் மாநிலங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்.” என்று கூறியது கவனிக்கத்தக்கது.

இந்த ஆலோசனக் கூட்டத்துக்கு ஆந்திர மாநிலம் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதேபோல் திரிணமூல் காங்கிரஸும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *