சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்கப்படுமா என பாமக எம்.எல்.ஏ அருள் கேள்வி எழுப்பினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசும் போது, சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது என கூறினார்.
தேனி – மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மிக மெதுவாக நடக்கிறது.
விரைவு படுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்த நிலையில், ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் அமைக்கப்படுமா? என அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பிய நிலையில், இந்த ஆண்டே இது தொடர்பாக ஆய்வு நடத்தி, புதிய கோட்டம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என அமைச்சர் எ.வ.வேலு பதில் கூறினார்.