கொல்லங்கோடு:
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தூக்கத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவின் போது நடைபெறும் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை சிறப்பு வாய்ந்தது.
இந்த விழாவில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் குழந்தைகளுடன் பங்கேற்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூக்க நேர்ச்சைக்கு முதல் நாள் நடக்கும் வண்டியோட்டம் நேற்று மாலை நடந்தது.
தூக்க வில்லை சோதனை செய்யும் வகையில் கோவிலை சுற்றி நடத்தப்பட்ட வண்டியோட்டம் நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணியளவில் வழக்கமான பூஜைகள் முடிந்ததும் தூக்கக்காரர்கள் முட்டு குத்தி நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளினார்.
அதன்பிறகு காலை 6.30 மணிக்கு முதல் தூக்க நேர்ச்சை தொடங்கியது. இதில் முதல் தூக்கம் தேவி தூக்கம்.
அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கான நேர்ச்சை தூக்கம் தொடங்கியது. ஒரு வில்லில் 4 குழந்தைகளை தூக்ககாரர்கள் தூக்கிச் சென்றனர். தூக்க நேர்ச்சையில் பங்கேற்க 1166 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக தூக்கதாரர்களும் தயாராக இருந்தனர்.
தூக்க வில்லானது ஒரு தடவை கோவிலை சுற்றி வரும்போது 4 தூக்க நேர்ச்சை நடந்து முடிகிறது. அதன்படி வில்லானது 350-க்கும் மேற்பட்ட முறை கோவிலை சுற்றி வந்து தூக்க நேர்ச்சை நிறைவடைகிறது.
ஒவ்வொரு தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்ப்பணம் நடைபெறும். இன்று இரவு வரை இந்த நிகழ்ச்சி நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் கேரளா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதை கருத்தில் கொண்டு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.