நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு அவர் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் கட்டப்படும் – அதிமுக கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு!!

சென்னை:
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு அவர் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் கட்டப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையின்போது அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் பேசும்போது, “சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு அவரது பிறந்த ஊரான தேனி மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் கட்டுவதற்கு முதல்வர் ஆவன செய்ய வேண்டும். தென்காசி மாவட்டத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், “உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் பேசும்போது, திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பால் மனோஜ் பாண்டியன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் தனது துறை சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் தென்காசி மாவட்டத்திலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்” என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *