திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், கொங்கு மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றுமாகிய பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இங்கு வந்து பக்தி பரவ சத்துடன் குண்டம் இறங்கினர்.
ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர்.
பிற்பகல் 11 மணிக்கு குண்டம் மூடப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டபக்கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செலுத்துதல், தேங்காய் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.
நாளை 9-ந்தேதி முதல் காலை , இரவு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் வீதி உலா, மண்டபக்கட்டளை நடக்கிறது. 12-ந்தேதி காலை 11 மணிக்கு மகாதரிசனம் , அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், மண்டபக்கட்டளை யுடன் விழா நிறைவடைகிறது.