பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து அ திக அளவு பக்தர்கள் வருவதால் கிரிவலப்பாதையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அதிகாலை முதலே தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களுக்கு மட்டும் மலைக்கோவிலில் ரூ.300 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாக சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோவில் சாலை, சன்னதி வீதியில் தேர் உலா வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் வரும் வழியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு அதிக அளவு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழைப்பழங்கள் இங்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.
பழனி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதியில் சாலையோரங்களில் தற்காலிக வாழைப்பழ கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பக்தர்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த ஆண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 50 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர கோவில் நிர்வாகம் சார்பில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கவும், அனைத்து ஸ்டால்களிலும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.