பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரம் பெரும் கவலையளிக்கிறது -திருமாவளவன்!!

பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரம் பெரும் கவலையளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு பயிலும் ரஹமத்துல்லா என்கிற மாணவனை அதே பள்ளியில் பயிலும் சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். தடுக்கப் பாய்ந்த ஆசிரியரையும் வெட்டியுள்ளான்.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பள்ளிச் சிறுவன் மீது இன்னொரு சிறுவன் நடத்தியுள்ள இந்தக் கொலைவெறித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிச் சிறுவர்களிடையே இதுபோன்ற வன்முறைக் கலாச்சாரம் பெருகிவருவது மிகுந்த கவலையளிக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த இரு மாணவர்களுக்கும் இடையில் பென்சில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

அதனையொட்டி சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களுக்கிடையில் பிரச்சினை உருவாகியிருக்கிறது. அப்போது வகுப்பாசிரியர் அம்மாணவர்களைக் கண்டித்ததோடு அவர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து நடந்ததைக்கூறி அறிவுறுத்தியும் அனுப்பியுள்ளார்.

ஆனால், இன்று காலை அதே ஆசிரியர் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவன் ரஹமத்துல்லாவை வெட்டியுள்ளான். அதனைத் தடுக்க முயன்ற ஆசிரியரையும் வெட்டியுள்ளான்.

வகுப்பறையில் மற்ற மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி பதறிக் கதறியுள்ளனர். பின்னர் வெட்டிய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் நாங்குநேரி சின்னத்துரை, தேவேந்திர ராஜா ஆகியோர் மீது இது போன்ற கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ன.

தற்போது பாளையங்கோட்டையிலும் அதேபோன்ற வன்முறை நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொழில்முறை குற்றவாளியைப் போல அவன் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறான் என்பதுதான் கூடுதல் கவலையளிக்கிறது.

பள்ளி மாணவர்களே இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு நாம்சார்ந்துள்ள சமூகச் சூழல்களே முதன்மையான காரணிகளாக உள்ளன. சாதியவாத, மதவாத அமைப்புகளும் அதே கருத்தியலைப் பரப்பும் ஒருசில அரசியில் கட்சிகளும் வெளிப்படையாகவே இளம்தலைமுறையினரிடையே “ஆண்ட பரம்பரை, வீரப்பரம்பரை” என்றெல்லாம் திட்டமிட்டே பரப்புரைகளைச் செய்துவருவதும்; அத்தகைய குற்றங்களை ஊக்கப்படுத்துவதும் தாம் பள்ளிச் சிறுவர்களிடையேயும் இதுபோன்ற வன்முறை ஈர்ப்பு உருவாகிறது. மதவெறி- சாதிவெறித் தாக்குதல்களை நடத்தும் வகையிலானத் துணிவையும் தருகிறது. இதனை “நீதிபதி சந்துரு ஆணையம்” சுட்டிக் காட்டியுள்ளது.

எனவே, இச்சூழலில் அந்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுவனின் கல்வி பாதிக்காத வகையில் அவனுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கல்வியைத் தொடர்வதற்கு உரிய ஏற்பாடு ஆகியவற்றை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளி மாணவர்களிடையே சகோதரத்துவம் தழைப்பதற்கேற்ற விழிப்புணர்வை உருவாக்கிட அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும்; அதற்கான தொலைநோக்குடன் கூடிய செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டுனவும் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *