சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர்,
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
- மாற்றுத்திறனாளி என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் கலைஞர் தான்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ரூ.1,432 கோடியாக உயர்த்தி உள்ளோம்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நிதி தருவதில் தமிழ்நாடு தான் முன்னணி.
- மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதியாக உள்ளது.
- அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
- புதிய அறிவிப்பின் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும்.
- இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.
- அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து சட்டமுன் வடிவை நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பை நடத்தினார்.
இந்த சட்டமுன்வடிவிற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.