பூந்தமல்லி – போரூர் வரை வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஏப்.30-க்குள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!!

சென்னை:
பூந்தமல்லி – போரூர் வரை வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்.30-ம் தேதிக்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இதில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ தொலைவுக்கு சோதனை ஓட்டம் கடந்த ஜன.20-ம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பூந்தமல்லி – போரூர் வரை ஏப்ரல் இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவழி பாதையில் (மேல் பாதை) தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது.

90 சதவீதம் நிறைவு: இதில் உயர்மட்ட மின்பாதை அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இன்னும் 10 நாட்களுக்குள் எஞ்சிய பணிகள் முடிந்துவிடும். தொடர்ந்து, தொழில்நுட்ப சோதனை நடத்தி, பழுதுகள் இருந்தால் சரிசெய்யப்படும். தொடர்ந்து, பூந்தமல்லி – போரூர் சந்திப்பு வரை ஒருவழி பாதையில் ஏப்.30-ம் தேதிக்குள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மற்றொரு பாதையில் (கீழ் பாதையில்) தண்டவாளம் அமைக்கும் பணி, உயர்மட்ட மின்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. ஒரு மாதத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி முழுவதும் முடிந்துவிடும்.

இதைத்தொடர்ந்து, உயர்மட்ட மின்பாதை அமைக்கும் பணி நிறைவடையும். ஜூன் 15-ம் தேதிக்கு மேல் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *