சென்னை:
பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறாா்.
பிரதமரின் இந்தப் பயணத்தின்போது எரிசக்தி, வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தில்லியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில், ‘சவூதி அரேபியா செல்லும் பிரதமா் அந்த நாட்டின் பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் அல் சவூதை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.
அதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே பல்வேறு துறை சாா்ந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.
இரு நாடுகளிடையே ஏற்கெனவே வலுவான உறவு இருந்து வரும் சூழலில், பிரதமரின் இந்தப் பயணம் பல்வேறு துறை சாா்ந்த இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும்.
இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் அமையும்’ என்றாா்.
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமைாகக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்திவரும் சூழலில், பிரதமரின் சவூதி அரேபிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின்னா், சவூதி அரேபியாவுக்கு தனது முதல் பயணத்தை பிரதமா் மோடி மேற்கொள்கிறாா்.
மத்தியில் கடந்த 2014-இல் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2016 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் இரு முறை சவூதி அரேபியாவுக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டுள்ளாா்.