சென்னை:
“பாஜக உடன் கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்ற கண்டிஷனைப் போட்டு தொடர அருகதை இருக்கிறதா?” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
பேரவையில் இன்று (ஏப்.21) பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை அனுமதித்ததால்தான் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது, என்று பேசினார்.
அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர், பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே, திமுகதான் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? கொண்டு வந்ததால்தான் இவ்வளவு சிக்கல் என்று கூறுகிறார்? சரி, அந்த சிக்கலை சரி செய்வதற்கு அதிமுகவுக்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாங்கள் செய்தது தவறோ, தவறில்லையோ நான் அந்த வாதத்துக்குப் போகவில்லை. விவாதத்துக்கும் வரவில்லை. இப்போது இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்தால்தான், நாங்கள் கூட்டணயில் இருப்போம், இல்லையென்றால் கூட்டணியைவிட்டு விலகுவோம் என்று பாஜகவிடம் கூறுவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா?l
நீட் தேர்வை ரத்து செய்வோம், என்று வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதில் நாங்கள் எந்தவிதமான மறுப்பும் கூறவில்லை. ஆனால், மத்தியில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நிச்சயமாக செய்திருப்போம். ஆனால், இப்போது அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்திருக்கிறதே, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்ற கண்டிஷனைப் போட்டு, கூட்டணியில் தொடர அருகதை இருக்கிறதா?
நாங்கள் ஒன்றும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்புவரை, பாஜகவின் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம், 2026 மட்டுமல்ல 2031-ல் கூட பாஜகவின் கூட்டணி வைக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு இப்போது கூட்டணி வைத்துள்ளீர்களே? யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.