புதுச்சேரி:
புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அதிமுக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பயணிகளும், இங்கு வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கடலூர் சாலை தற்காலிக பேருந்து நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏற்கெனவே புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இன்னும் திறக்கப்படாததால் இன்று தற்காலிக பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: தற்போது சுமார் 33 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகளுக்கு பதிலாக வணிக வளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அங்கு புதியதாக கட்டப்பட்ட 30-க்கும் மேற்பட்ட கடைகளை பிரித்து கொடுப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டுள்ளது.
பேருந்து நிலையம் விரிவாக்கம் முடிவடைந்து கடந்த 4 மாதங்களுக்கு முன் நகராட்சியிடம் பேருந்து நிலையம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிகமாக இயங்கும் பேருந்து நிலையத்தால் மக்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
அங்கு தினசரி வரும் பயணிகள் வசதிக்காக கழிப்பறைகள் கூட இல்லை. தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்படும் புழுதிகாற்றினால் சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினால் தினசரி மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
ரயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 3 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டும் இந்த தற்காலிக பேருந்து நிலையம் மாற்றப்படாததால் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் தடை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பொறுப்பற்ற முறையில் உள்ளனர்.
உண்மை நிலையை முதல்வர் உணர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை அழைத்து பேசி கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மாதத்திற்குள் கொண்டுவர வேண்டும்.
தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு உள்ள நபர்களின் விருப்பு வெறுப்புகளினால் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளது வருத்தம் அளிக்க கூடிய விஷயமாகும்.” என்றார்.