”டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்” – சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

மதுவிலக்கு அமலாக்க போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு, குற்ற புலானய்வு பிரிவுடன் இணைக்கப்பட்டு அமலாக்க பணியகம் குற்றப் புலனாய்வு பிரிவு என்ற ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரேதாமாக மதுபானம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனையை தடுத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை தடுப்பது இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும்.

மது மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக கடந்த 2024-ம் ஆண்டு 7,691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7,486 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025-ம் ஆண்டில் 952 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் அருகே இருந்த 103 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

மேலும், கூடுதலாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் வருமானத்தில்தான் அரசு செயல்படுவதாக ஒரு தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்யப்படுவதாக பத்திரிகைகள், ஊடகங்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்யப்பட்டதாக 15,405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது இச்செய்தி குறித்து எந்த பத்திரிகைகளையும் செய்தி வெளியிடவில்லை.

கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டதற்காக பணியாளர்களிடம் இருந்து ரூ.6.79 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில பணியாளர்கள் இடமாற்றம், சில பணியாளர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று வரும் போது, தமிழகத்திலும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

பின்னர், சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களை கண்டறிந்து விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமலாக்க பணியகம், குற்றப்புலனாய்வு துறையின் பயன்பாட்டுக்காக 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வழங்கப்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி மனந்திருந்தியவர்களுக்கு சுயதொழிலில் ஈடுபட நபர் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையா ளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் ஏப்.1-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். இவை உட்பட 7 அறிவிப்புகளை வெளியிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *