திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் பழங்குடியின வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 இளம்பெண்களை மணந்தார் அதேபோல மற்றொரு சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறி உள்ளது.
ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஜெய்னூர் மண்டலம் அத்தேசரா கிராமத்தைச் சேர்ந்தவர் அத்ரம் சத்ருஷாவ். இவர் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இது ஒரு புறம் இருக்க கெரமேரி மண்டலத்தில் உள்ள சங்கி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வருடமாக அந்த பெண்ணையும் காதலித்தார். 2-வதாக காதலித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
15 நாட்களுக்கு முன்பு அவருடன் நிச்சயதார்த்த விழா நடந்தது. இதனால் பதறிப்போன முதல் காதலி ஆலோசனை மையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர்கள் வாலிபர் மற்றும் 2 இளம்பெண்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண்கள் இருவரும் சத்ருஷாவை திருமணம் செய்வோம் என அடம்பிடித்தனர்.
அதற்கு வாலிபர் ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு காதலிகள் இருவரையும் மகிழ்ச்சியோடு வாழ வைப்பேன் என உறுதி அளித்தார்.
இதற்கு இளம்பெண்களின் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களது சொந்த கிராமத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. வாலிபர் தன்னுடைய 2 காதலிகளுக்கும் ஒரே நேரத்தில் தாலி கட்டினார்.
திருமணத்தில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. 2 காதலிகளை மணந்து அமர்ந்திருந்த புது மாப்பிள்ளைக்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.