ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து தீர்த்தமாடினர்.
அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை இரவிலிருந்தே ராமேசுவரம் வரத் தொடங்கினர்.
ராமேசுவரம் கீழரத வீதியில் திரண்ட பக்தர்கள்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அக்னி தீர்த்தக்கடலில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடி, நான்கு ரதவீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
அமாவாசையையொட்டி பக்தர்களின் வசதிக்காக ராமேசுவரத்தில் பல்வேறு சத்திரங்களில் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலின் ஒரு பகுதியில் புனித நீராடிக் கொண்டிருந்த வேளையில் அக்னி தீர்த்தத்தின் அருகிலிருந்த பாதாள சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து வந்து கடலில் கலந்துகொண்டிருந்தது.
இதைக் கண்ட பக்தர்கள் சிலர் மனம் வெதும்பிய நிலையில் கடலில் இறங்காமல், வேறு வழியின்றி பேருக்கு சிறிது நீரை மட்டும் எடுத்து தலையில் தெளித்தவாறு சென்றனர்.