சிபிஐ, வருமான வரி, புலனாய்வு, அமலாக்கத் துறை என துறையை வைத்து மிரட்டினாலும், கவலைப்பட வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

சென்னை:
சிபிஐ, வருமான வரி, புலனாய்வு, அமலாக்கத் துறை என துறையை வைத்து மிரட்டினாலும், கவலைப்பட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக எம்எல்ஏ இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், காவல் துறை மானிய கோரிக்கையில் நான் பதில் அளித்து பேசும்போது, தமிழகத்தின் வளர்ச்சி பற்றி கூறினேன். ‘‘ஊர்ந்து கொண்டிருந்த தமிழகம், இன்று கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது’’ என்றேன். இதில் ‘ஊர்ந்து வந்து’ என்பதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கூறினார்.

‘ஊர்ந்து’ என்பது அவர்களுக்கு பிடிக்காவிட்டால், ‘தவழ்ந்து’ என்று மாற்றுங்கள் என்றேன். ஏற்கெனவே எஸ்டிபிஐ மாநாட்டில் பேசிய பழனிசாமி, ‘‘நான் தவழ்ந்து, தவழ்ந்து, படிப்படியாக வந்து முதல்வர் ஆகியுள்ளேன்’’ என்று பேசியுள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது. இதை நேற்றுதான் பார்த்தேன். இல்லாவிட்டால் பேரவையில் கூறியிருப்பேன்.

இந்தியாவுக்கு, உலகுக்கே வழிகாட்டக்கூடிய சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம். தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். இப்போது கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளும் விரைவாக, நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் 200, 220 வரும் என்றார்கள். அதில் என்ன கஞ்சத்தனம். 234 வரும் என்று சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

நம்மை எதிர்ப்பவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடுதான் கடமையை ஆற்றி வருகிறோம். சிபிஐ, வருமான வரி, புலனாய்வு, அமலாக்கத் துறை என துறையை வைத்து மிரட்டினாலும், கவலைப்பட வேண்டாம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *